தடுப்பூசி திருவிழாவில் 3,770 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சிவகங்கை, ஏப்.17:  கொரோனா தடுப்பூசி திருவிழா முகாம்களில் இதுவரை 3 ஆயிரத்து 770 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் பொது சுகாதாரத்துறை சார்பில் கொரோனா ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக 45 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலருக்கும் கொரோனோ தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் 11.04.2021 முதல் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மினி கிளினிக்குகள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் தடுப்பூசி திருவிழா நடந்து வருகிறது. இதில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அனைத்து நகராட்சி, பேரூராட்சி, ஊரகப்பகுதிகளில் தன்னார்வலர்கள், சங்கங்கள் போன்ற பிற அமைப்புகளுடன் இணைந்து இந்த தடுப்பூசி திருவிழா தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், 30 நபர்களுக்கு மேல் பணிபுரியும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு பொது சுகாதாரத்துறை மருத்துவக்குழு மூலம் நேரடியாகச் சென்று தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி திருவிழா முகாம்களில் இதுவரை 3 ஆயிரத்து 770 நபர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஏற்கனவே 38 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், அவசியத் தேவைக்கு வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். அடிக்கடி சோப்பு கொண்டு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். பொது இடங்களில் தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும். கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டு பகுதிக்கு எவரும் செல்லக்கூடாது. சளி, காய்ச்சல், இருமல், தொண்டைவலி போன்ற அறிகுறிகள் ஏதும் இருப்பின் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>