தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தல்

திண்டுக்கல், ஏப். 17: தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பிளஸ் 2 தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என அரசுக்கு தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தித் தொடர்புச் செயலாளர் முருகேசன் கூறுகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஏப்.16ம் தேதி முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு செய்முறை தேர்வும், மே 3ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை நேரடி தேர்வையும் நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் தற்போது தமிழகத்தில் கடந்த ஆண்டை விட உயர்ந்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 800ஐ தாண்டி உயர்ந்து கொண்டே வருகிறது. இறப்பு விகிதமும் அதிகரிக்கிறது. இந்த சூழ்நிலையில் நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு சி.பி.எஸ்.இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைத்தும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சி.பி.எஸ்.இ தேர்வுகள் தள்ளிப்போவதால் அகில இந்திய அளவில் நடைபெறும் நீட் தேர்வும் தள்ளிப்போகும் நிலையில் உள்ளது. எனவே மத்திய அரசை பின்பற்றி தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத காத்திருக்கும் 2 லட்சம் மாணவர்களின் நலன்கருதியும், பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்களின் கோரிக்கையை ஏற்றும் நோயின் தாக்கம் குறைந்த பின் பிளஸ் 2 தேர்வை நடத்த வேண்டும்’ என்றார்.

Related Stories: