திருப்பூர் மாநகராட்சியில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

திருப்பூர், ஏப். 17: டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் அதிகரித்துள்ளதால் காய்ச்சல் தடுப்பு பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. திருப்பூரில் டெங்கு காய்ச்சல் ஏற்படுத்தும் ‘ஏடிஸ்’ வகை கொசுக்கள் அதிகரித்துள்ளதால், மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதைத் தொடர்ந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டெங்கு பாதிப்பு மற்றும் அறிகுறி காணப்படும் வார்டுகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. சுகாதார அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதேநேரம், கொசு உற்பத்தியாகும் பகுதிகளை கண்டறிந்து, கொசு ஒழிப்புப் பணியும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று காங்கயம் ரோடு அரசு போக்குவரத்து பணிமனை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பழைய டயர்களில் மழை நீர் தேங்கியுள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.

இதேபோல் ராக்கியாபாளையம் குடியிருப்பு பகுதிகளில் மாநகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களிடம், தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை கொசு புகாமல் மூடி வைக்க வேண்டும். குடிநீர் தொட்டிகளை பிளீச்சிங் பவுடர் உதவியுடன் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எந்த பாத்திரத்தையும் திறந்த நிலையில் வைக்க கூடாது. உடைந்த பிளாஸ்டிக் பொருள், தேங்காய் மட்டை, டயர் உள்ளிட்ட தண்ணீர் தேங்கும் பொருட்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தற்போது உள்ள சுகாதார ஆய்வாளர்களைக் கொண்டே கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எந்த அளவிற்கு களப்பணியாற்ற முடியுமோ அந்த அளவிற்கு துப்புரவு பணியாளர்களுடன் இணைந்து, பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது, டெங்கு ஏற்படுவதை தடுக்க சுகாதாரப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கி நிற்பதை அப்புறப்படுத்துவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Related Stories: