முக கவசம் அணியாத பயணிகள் பஸ் கண்டக்டர், டிரைவர் மீது வழக்கு

திருப்பூர், ஏப். 17: திருப்பூரில் முக கவசம் அணியாமலும், நின்று கொண்டும் பஸ்களில் பயணம் செய்ய அனுமதித்த பஸ் கண்டக்டர் மற்றும் டிரைவர்கள் மீது வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர். தமிழகத்தில் கொரோனா பரவுவதை குறைக்க பஸ்களில் முக கவசம் அணியாத பயணிகளை ஏற்றிச்செல்லக்கூடாது. நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதில் விதிமீறல் நடப்பதாக கலெக்டர் விஜயகார்த்திகேயனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து கலெக்டர் இதுகுறித்து ஆய்வு செய்யுமாறு வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி (பொறுப்பு) வெங்கட்ரமணி உத்தரவின் பேரில், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் சிவகுமார், நிர்மலா உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று அவிநாசி ரோட்டில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பயணிகள் முக கவசம் அணியாமலும், கூட்டமாக நின்றுகொண்டும் வந்த பஸ்களை நிறுத்தி, அந்த பஸ்களின் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி வெங்கட்ரமணி கூறுகையில், கலெக்டர் உத்தரவின் பேரில், கடந்த இரண்டு நாட்களாக  திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பல பகுதிகளில் பஸ்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத கண்டக்டர் மற்றும் டிரைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் விபரங்கள் கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்படும், என்றார்.

Related Stories: