லாட்டரி விற்பனை மீண்டும் ஜோர்

ஈரோடு, ஏப். 17:   தேர்தலையொட்டி கட்டுக்குள் இருந்து வந்த லாட்டரி சீட்டு விற்பனை தற்போது மீண்டும் கனஜோராக விற்பனை செய்யப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, கருங்கல்பாளையம், பவானி, பெருந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஏஜென்ட், சப் ஏஜென்ட்டுகள் என நியமிக்கப்பட்டு அப்பாவி கூலி தொழிலாளர்களை குறிவைத்து விற்பனை செய்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இந்த சட்டவிரோத லாட்டரி விற்பனை தினமும் பல லட்சங்களுக்கு நடந்து வருகிறது. மாவட்ட காவல்துறை நிர்வாகத்திற்கு இந்த சட்டவிரோத செயல்கள் குறித்து முழுமையாக தெரிந்த போதிலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். இந்நிலையில், சட்டமன்ற தேர்தலையொட்டி பல்வேறு கெடுபிடிகள் இருந்ததால், லாட்டரி விற்பனையானது கட்டுக்குள் இருந்து வந்தது. தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் சட்டவிரோத லாட்டரி விற்பனை கொடிகட்டி பறக்க ஆரம்பித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.   இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தால், வழக்கம் போல பெயரளில் லாட்டரி விற்பனை செய்ததாக அபராதம் கட்டி வெளியே வரும் வகையில், ஒரு வழக்கினை பதிவு செய்துவிட்டு தங்களது கடமையை முடித்துக்கொள்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Related Stories:

>