அரசு வேலை வாங்கி தருவதாக ₹25 லட்சம் நூதன மோசடி: வாலிபர் கைது

அண்ணாநகர்: சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (72). இவரது மகன் ராஜிவ் (38). இவர்கள் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இயந்திர உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு, சோழிங்கநல்லூரை சேர்ந்த சங்கர் (56), தொழில் தொடர்பாக அறிமுகமானார். அப்போது, தமிழக பொதுப்பணி துறையில் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் கூறுங்கள், என பாலகிருஷ்ணன், ராஜிவ் ஆகியோர் சங்கரிடம் கூறியுள்ளனர்.இதனையடுத்து, தனது மகனுக்கு வேலை வாங்கி தரும்படி, சங்கர் கூறியுள்ளார். அதற்கு, ₹25 லட்சம் செலவாகும் என பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, கடந்த ஆண்டு 25 லட்சத்தை சங்கர் கொடுத்துள்ளார். ஆனால், நீண்ட நாட்களாகியும்  அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. இதனால், பணத்தை திருப்பி தரும்படி சங்கர் கேட்டுள்ளார். அதையும் தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுபற்றி, சங்கர் கேட்டபோது, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, அமைந்தகரை போலீசில் சங்கர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று முன்தினம் இரவு ராஜிவை கைது செய்து, எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவரது தந்தை பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.

Related Stories:

>