செய்தி துளிகள்

பைக் திருடியவர் கைது: கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரனின் பைக்கை திருடிச் சென்ற அதே பகுதியை சேர்ந்த மணிகண்டனை (20) போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 2 விலை உயர்ந்த பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

* கொடுங்கையூரை சேர்ந்த அரவிந்தனின் பைக்கை திருடிய வியாசர்பாடி தாமோதரன் நகரை சேர்ந்த சுரேஷ் (32), அவரது உறவினர் விஜய் (32) ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவி தற்கொலை: அண்ணாநகரை சேர்ந்த ராஜேஸ்வரி (40), அதே பகுதியில் பெண்கள் விடுதி நடத்தி வருகிறார். இவரது 17 வயது மகள் அதே விடுதியில் தங்கி, தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தாள். நேற்று முன்தினம் இச்சிறுமி தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள்.

* திருவொற்றியூர் கல்யாண செட்டி நகர்   எண்ணூர் விரைவு சாலையை சேர்ந்த தனசேகர் (எ) வினோத் (25), நேற்று  மாலை எண்ணூர் விரைவு  சாலையில் கன்டெய்னர் லாரி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

கஞ்சா விற்ற 3 பேர் கைது: ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து வடசென்னையில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து வந்த தண்டையார்பேட்டை துர்காதேவி நகரை சேர்ந்த அன்வர் பாஷா (23), சுனேஷ்குமார் (22), பாலாஜி (19) ஆகியோரை போலீசார் கைது செய்து, இவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மாணவிக்கு காதல் தொல்லை: மாத்தூர் எம்எம்டிஏ பகுதியை சேர்ந்தவர் கந்தன் (35). இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், அதே பகுதியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்ததால், புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

லாரியிலிருந்து விழுந்தவர் பலி: மாத்தூர் சிபிசிஎல் நகரை சேர்ந்த  சுப்பிரமணி (40), மனைவி உஷாவுடன் (37) நேற்று மணலி சிபிசிஎல் கம்பெனிக்கு சொந்தமான குப்பை கிடங்கில், இரும்பு பொருட்களை சேகரிக்க சென்றார். அப்போது, அங்குள்ள லாரி ஒன்றில் ஏறியபோது தவறி கீழே விழுந்ததால், கல்லில்  தலை மோதி சம்பவ இடத்திலே இறந்தார்.

பாலத்திலிருந்து குதித்த வாலிபர் படுகாயம்: சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து (34), அமைந்தகரையில் கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர், குடும்ப தகராறு காரணமாக நேற்று குரோம்பேட்டை எம்ஐடி மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். அப்போது கீழே ஜிஎஸ்டி சாலையில் சென்ற சொகுசு கார் மீது விழுந்து படுகாயமடைந்தார். அவரை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர்.

ஏசி மெக்கானிக் தற்கொலை: ஓட்டேரி தேவராஜ் தெருவை சேர்ந்த ஏசி மெக்கானிக் லோகநாதன் (47), நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில், லோகநாதன் கொசப்பேட்டை பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரிடம் ₹40 ஆயிரம் கந்து வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். அதை திருப்பி செலுத்தாததால் லோகநாதன்  மற்றும்  அவரது மனைவியை செல்வம் ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால், மனமுடைந்த லோகநாதன் தற்கொலை செய்தது தெரிந்தது. இதுபற்றி தனது செல்போனில் ஆடியோ பதிவு செய்து வைத்திருந்ததும் தெரிந்தது.

Related Stories: