வலுவிழந்த தென்கரை வாய்க்கால் பாலம் அச்சத்துடன் கடந்து செல்லும் மக்கள்

குளித்தலை, ஏப்.16: குளித்தலை ஊராட்சி ஒன்றியத்தில் கே.பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கட்டுப்பாட்டில் கே.பேட்டை திம்மாச்சிபுரம் வீரவல்லி சீகம்பட்டி ஐநூற்றுமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே தென்கரை வாய்க்கால் உள்ளது. ரயில் நிலையம், ஆரம்பப்பள்ளி மற்றும் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பினர் வசித்து வருகின்றனர். இதனால் இந்த சிறிய பாலம் மூலம் தினந்தோறும் ஏராளமானோர் கடந்து சென்று வருகின்றனர். பொதுமக்கள் வசதிக்காக தென்கரை வாய்க்காலில் சிறிய பாலம் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு டூவீலர்கள் செல்வதும், பாதசாரிகள் சிரமமின்றி நடந்தும் சென்று வந்தனர். நாளடைவில் இந்தப் பாலம் அடிப்பகுதி வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் தற்போது உள்ளது.  இருப்பினும் அப்பகுதி மக்கள் இப்பாலத்தை கடந்து வருகின்றனர். தற்போது இந்த பாலம் முழுவதும் வலுவிழந்து காணப்படுவதால் எந்த நேரத்தில் ஆபத்து நேரிட வாய்ப்புள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி எவ்வித அசம்பாவிதமும் நடக்காததற்கு முன் நடவடிக்கை எடுத்து பாலத்தை சீர் செய்ய வேண்டும். மேலும் கே.பேட்டை ஊராட்சியாக இருப்பதாலும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக இருப்பதாலும் இப்பகுதியிலுள்ள தென்கரை வாய்க்காலில் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் பாலத்தை விரிவுபடுத்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: