×

கழிவுநீர் செல்ல வழியின்றி சாக்கடையில் அடைப்பு தொற்று நோய் பரவும் அபாயம்

க.பரமத்தி, ஏப்.16: சின்னதாராபுரத்தில் உள்ள சாக்கடையில் கழிவுநீர் செல்ல வழியில்லாத அளவிற்கு பிளாஸ்டிக் பொருட்களால் அடைப்பு ஏற்பட்டுள்ளதை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். க.பரமத்தி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னதாராபுரத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு மற்றும் கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையின் ஓரத்தில் இருபுறமும் உள்ள சாக்கடைகளில் கலக்கின்றன. சுற்றுச்சூழலை பெரும் அளவில் மாசுப்படுத்தும், மறு சுழற்சிக்கு பயன்படுத்த முடியாத, 40 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து அனைத்து உள்ளாட்சிகளிலும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. ஆனால், தடையை மீறி சின்னதாராபுரம் கடைவீதியில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. தள்ளுவண்டி கடைகள் முதல் பெரிய பெரிய கடைகள் வரையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் இதனை வாங்கி செல்வோர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்கை சாக்கடையில் வீசி விடுகின்றனர்.

இதன் காரணமாக கழிவுகள் செல்ல முடியாமல் அங்கேயே மாதக்கணக்கில் தேங்கி விடுகிறது. இதனை ஊராட்சி நிர்வாகம் முறையாக சுத்தம் செய்யாததால் பஸ் நிறுத்தம் அருகே கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இந்த கொசுக்களால் பாதிக்கப்பட்டு மலேரியா, டெங்கு போன்ற நோய் பாதிப்புக்கும் அபாயம் உள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக சாக்கடையில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்தி தடையின்றி கழிவுநீர் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம்