கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் மீண்டும் இயக்கம்

நாகை, ஏப்.16: கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்ட மும்பை லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் நாகை ரயில்வே ஸ்டேசன் வரவுள்ளது. காவிரி டெல்டா மாவட்டத்தின் கடைகோடி மாவட்டமான நாகை மாவட்டத்தில் ரயில் பாதை கடந்த 2009-ம் ஆண்டில் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டது. இதன் பின்னர் ரயில் போக்குவரத்து நடந்து வருகிறது. மற்ற மாவட்டங்களுக்கு இல்லாத சிறப்பு நாகை மாவட்டத்திற்கு உண்டு. வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்கா, சிக்கல் சிங்காரவேலர், கோரக்கர்சித்தர், நீலாயதாட்சியம்மன், 108 திவ்யதேசங்களில் 19 திவ்யதேசமாக நாகை சவுந்திரராஜபெருமாள் கோயில் என பல ஆன்மிக சுற்றுலாத் தலங்களின் மையமாக உள்ளது. இதை தவிர வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தி, கோடிக்கரை பறவைகள் சரணாலயம், நாகையில் மீன்பிடி இறங்குதளம் என பல சிறப்புகளை பெற்ற நாகைக்கு கூடுதல் ரயில்கள் வேண்டும், அதிக அளவில் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக சமூக ஆர்வலர்களும், நாகை பகுதி பொதுமக்களும் கோரிக்கை வைத்து வந்தனர்.

நாகையிலிருந்து சென்னைக்கு சென்று வர பகல் நேரங்களில் ரயில்கள் இயக்க வேண்டும், நாகையில் இருந்து தென் மாநிலங்களை இணைக்கும் வகையில் மதுரைக்கு ரயில் இயக்க வேண்டும். வேளாங்கண்ணி, நாகூர் தர்கா ஆகிய இடங்களுக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வெளி மாநிலங்களில் இருந்து வந்து செல்வதால் வெளி மாநிலங்களை இணைக்கும் வகையிலும் ரயில்கள் விட வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தக் கோரிக்கையை ஏற்று நாகை - சென்னை- மும்பைக்கு ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் முன்வந்தது. இதன் பேரில் லோக்மான்ய திலக் என்ற எக்ஸ்பிரஸ் ரயில் வாரந்திர ரயிலாக கடந்த 2011ம் ஆண்டிலிருந்து இயக்கப்பட்டது. காரைக்காலில் அகல ரயில் பாதை அமைந்ததும் இந்த ரயில் காரைக்கால் வரை இயக்கப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் லோக்மான்ய திலக் ரயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை புறப்படும் இந்த ரயில் புனே, ரேணிகுண்டா, சென்னை, திருவாரூர் வழியாக ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நாகைக்கு வரும். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு காரைக்கால் செல்லும். காரைக்காலில் இருந்து திங்கள்கிழமை மதியம் 2 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் 2.36 மணிக்கு நாகைக்கு வரும். இரவு 10 மணிக்கு சென்னை எக்மோர் ரயில் நிலையத்துக்குச் செல்லும். செவ்வாய்க்கிழமை மும்பை லோக்மான்ய திலக் ரயில் நிலையத்துக்குச் செல்லும்.

இந்நிலையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் அனைத்து ரயில் போக்குவரத்தையும் மத்திய அரசு நிறுத்தியது. இதனால் பல மாதங்களாக ரயில் போக்குவரத்து தடைபட்டிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன் மீண்டும் மத்திய அரசு ரயில் போக்குவரத்தைத் தொடங்கியது. இதனால் நாகை தடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து நடைபெறுகிறது. ஆனாலும் மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலான லோக்மான்ய திலக் ரயில் போக்குவரத்து தொடங்கப்படாமல் இருந்தது. தற்போது மே 19ம் தேதி முதல் லோக்மான்ய திலக் ரயில் போக்குவரத்து தொடங்கப்படும் என ரயில்வே துறை கடந்த 4ம் தேதி அறிவித்தது. இதையடுத்து மீண்டும் லோக்மான்ய திலக் ரயில் போக்குவரத்துத் தொடங்குவதற்கான அறிவிப்பு நாகை ரயில் நிலையத்தில் ஒட்டப்ட்டுள்ளது. இந்த ரயில் கூடுதல் கட்டணத்துடன் சிறப்பு ரயிலாக இயக்கப்படவுள்ளது எனவும், ஏற்கெனவே 1017 / 1018 என்ற எண்ணில் வந்து சென்ற லோக்மான்ய திலக் ரயில், இனிவரும் நாட்களில் 01017 / 01018 என்ற எண்ணுடன் இயங்கும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது.

Related Stories: