முககவசம் அணியாத 700 பேர் மீது வழக்குப்பதிவு மாநகர காவல்துறை நடவடிக்கை

திருச்சி, ஏப். 16: கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் பரவிய கொரோனா வைரசை அடுத்து உலக நாடுகள் அனைத்திலும் பரவியதை அடுத்து கடந்தாண்டு மார்ச் 25ம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையில் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் ஈடுபட்டு தற்போது மருந்து கண்டுபிடிக்கப்பட்டு இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு என்ற பெயரில் அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைய துவங்கியதை அடுத்து கடந்தாண்டு ஜூலை மாதம் முதல் பல்வேறு தளர்வுகள் கொண்டு வரப்பட்டது.தற்போது கொரோனா பரவுதல் எண்ணிக்கை தினமும் கூடுதலாகி வருவதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் கொரோனா எண்ணிக்கை வேகமாக பரவுவதை அடுத்து அரசு, கடந்த 10ம் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அமலுக்கு வந்தது. இதில் திருமணத்தில் 100 பேர் கலந்து கொள்ள வேண்டும். இறப்பு சடங்குகளில் 50 பேர் பங்கேற்க வேண்டும். கேளிக்கை மற்றும் திரையரங்கில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி. பஸ்களில் நின்று கொண்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் தீவிர சோதனை நடத்தி முககசவம் இன்றி வாகனத்தில் வருபவர்கள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களை கண்டறிந்து வழக்குபதிந்து அபராதம் விதித்து வருகின்றனர். இதில், கடந்த 10ம் தேதி முதல் நேற்று வரை முககவசம் இன்றி வந்த 700 பேர் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 50 பேர் மீது வழக்குப்பதிந்து அபராதம் விதித்துள்ளனர்.

Related Stories: