×

திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் பிரேத பரிசோதனைக்கு பயன்படுத்திய பொருட்கள் கிடப்பதால் தொற்று பரவும் அபாயம்

திருப்பூர், ஏப். 16:  திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் திறந்த வெளியில் பிரதே பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  திருப்பூர் தாராபுரம் ரோட்டில் உள்ள தலைமை அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், புறநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு சிகிச்சை பெற தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். இங்கு கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறும் இடமும் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகரப்பகுதியில் ஏற்படும் சந்தேக மரணம், கொலை, தற்கொலை போன்ற வழக்குகளில் இறந்தவர்களை திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைத்து பிரேத பரிசோதனை செய்து உரிய ஆய்வுக்கு பின் உடலை உறவினரிடம் ஒப்படைப்பது வழக்கம். இந்நிலையில், அந்த பிரேத பரிசோதனை அறையில் உள்ள ரத்தகறை படிந்த டிரம்கள் மற்றும் பிரேத பரிசோதனைக்கு பயன்படுத்தப்படும் கையுறைகள், ரத்தங்களை துடைத்து வைத்திருக்கும் பஞ்சு ஆகியவை மருத்துவமனையில் மக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் போட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி சுகாதாரசீர்கேடு ஏற்பட்டுள்ளது.

 இது குறித்து நோயாளிகள் கூறுகையில்,`பிணவறையில் பிரேத பரிசோதனை முடிந்தவுடன் அந்த ரத்த கரையுடன் கூடிய பிளாஸ்டிக் டிரம்களை அங்குள்ள முதியவர் ஒருவர் வந்து வைத்து செல்கிறார். 2 நாட்களுக்கு ஒரு முறை எந்த வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் அந்த இடத்தை ஒருவர் சுத்தம் செய்கிறார். மேலும், ரத்த கரை படிந்த பஞ்சுகள் காற்றில் பறந்து சிதறுகிறது. இதனால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக்கல்லூரி கட்டிட கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. இதனால், மருத்துவமனை வளாகம் மோசமடைந்து சுகாதாரமில்லாமல் காணப்படுகிறது. மேலும்,  மருத்துவமனைக்கு வருபவர்கள் பெரும்பாலானோர் முகக்கவசம் அணிவதில்லை. மருத்துவமனை நிர்வாகமும் இதனை கண்டும் காணாமல் உள்ளது. இதன் மீது மருத்துவமனை நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார். 

Tags : Tirupur Government Hospital ,
× RELATED திருப்பூர் அரசு மருத்துவமனையில் 190 படுக்கைகளுடன் கொரோனா வார்டு தயார்