×

திருப்பூர் சாலையில் கொட்டப்படும் பாலித்தீன் கழிவுகளால் சுகாதார கேடு

திருப்பூர், ஏப்.16: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலித்தீன் பைகள் ரோட்டில் வீசப்பட்டு வருவதால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. 20 மைக்ரான் அளவுக்கு குறைவான ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலித்தீன் பைகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்வதற்கும், அதை வாங்கி பயன்படுத்துவதற்கும் அரசு தடை விதித்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி பகுதியிலும் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது. இருப்பினும், இந்த பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனையும், பயன்பாடும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாலித்தீன் பைகள், பேக்கரி, டீக்கடைகளில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர்கள் ஆகியவற்றை ரோட்டோரம் வீசி சென்று விடுகிறார்கள்.
இதில், பாலித்தீன் பைகள் காற்றில் பறந்து கால்வாயை அடைத்து கழிவுநீர் செல்ல முடியாமல் தடுக்கிறது. சமீபகாலமாக, மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் குப்பை அடைப்பு காரணமாக சாக்கடை கால்வாய்களில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் பரவவும் வாய்ப்பாகிறது.

குறிப்பாக, திருப்பூர் பழைய, புதிய பஸ் நிலையம், ரயில் நிலையம், குமரன் ரோடு, புஷ்பா ரவுண்டானா பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மாநகராட்சி நிர்வாகம் சரிவர நடவடிக்கை எடுக்காததன் காரணமாக பாலித்தீன் குப்பை நகராக திருப்பூர் மாறி வருகிறது. இதுதவிர, பாலித்தீன் பைகளை பிரிக்காமல் அப்படியே அள்ளிச்சென்று பாறைக்குழியில் கொட்டி வருகின்றனர். பாறைக்குழியில் கொட்டிய குப்பையில் மர்ம ஆசாமிகள் தீ வைத்துவிட்டு சென்று விடுகிறார்கள். அப்போது குப்பையுடன் சேர்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகள், பாலித்தீன் பைகள் தீயில் எரியும் போது வெளியாகும் நச்சு வாயுவால் சுற்றுப்பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னைகளை தவிர்க்க திருப்பூர் மாநகர பகுதியில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டம்ளர்கள், பாலித்தீன் பைகளை முழுமையாக தடை செய்ய வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Tirupur ,
× RELATED பார் அசோசியேசன் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்