×

16 நடமாடும் வாகனங்கள் மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி

ஊட்டி,ஏப்.16: நீலகிரி மாவட்டத்தில் 16 நடமாடும் வாகனங்கள் மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டு கொள்ளும்மாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டத்தை பொறுத்த வரை சுமார் 30 சதவீதம் அதாவது 2.50 லட்சம் பேர் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். இதுவரை தடுப்பூசி போட்டு கொள்ளாத நபர்கள் தாங்களாகவே முன்வந்து தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி செலுத்தி கொள்ள கூட்டம் அலைமோதுகிறது. 16 நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், நீலகிரி மாவட்டத்தில் 33 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 6 அரசு மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் கடந்த 11ம் தேதி துவங்கி கொரோனா தடுப்பூசி திருவிழா நடந்து வருகிறது. அதிகபட்சமாக 13ம் தேதி மட்டும் 4200 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதுவரை மாவட்டத்தில் 98 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். தேயிலை தோட்டங்கள், கட்டுமான தொழிலாளர்கள், மார்க்கெட் வியாபாரிகளுக்கு தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுதவிர 16 நடமாடும் வாகனங்கள் மூலமாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது, என்றார்.

Tags :
× RELATED பவானி அருகே ஸ்கூட்டர் மீது பஸ் மோதி கல்லூரி மாணவர் பலி