மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனத்தில் குட்டி யானை பள்ளத்தில் விழுந்து பலி

மேட்டுப்பாளையம், ஏப். 16: மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை வனத்தில் குட்டி யானை பள்ளத்தில் விழுந்து பலியானது. மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பெத்திகுட்டை வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது இரண்டரை வயது பெண் யானை உயிரிழந்து கிடந்தது. இத்தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின் பேரில் சம்பவயிடம் சென்ற கால்நடை மருத்துவ அதிகாரி சுகுமார்  யானையின் உடலை நேற்று மருத்துவ பரிசோதனை செய்தார். இதில் யானையின் உடம்பின் மேல் வெட்டு குத்து காயங்களோ குண்டடிபட்ட காயங்களோ இல்லை. வலது புறம் மார்பக விலா எலும்பு கூண்டின் மேற் பகுதி மற்றும் வலது பக்கவாட்டு வயிறு பகுதியில் உள் காயங்கள் அறிகுறிகளாக தோலுக்கு அடியில் மிகவும் சிவந்து காணப்பட்டது அதேபோல நுரையீரல் இருதயம் அதிகமாக சிவந்து காணப்பட்டது.

அதன் வயிற்றில் ஜீரணமாகாத உணவு பொருட்கள் மற்றும் சிறு குடலில் சிறிது ஜீரணமான  உணவுப் பொருட்களும் பெருங்குடலில் ஜீரணமான உணவுப் பொருட்களும் இருந்தது. வாயில் காயங்கள் இல்லை. ஆய்வுக்கு உடற்கூறு மாதிரிகள்  சேகரம் செய்யப்பட்டுள்ளது. தற்போது முதல்கட்ட மருத்துவ பரிசோதனையும முடிவுகளின் அடிப்படையில் குட்டி யானை வேறொரு யானை முட்டிமோதியதால் அடிபட்டு  பள்ளசரிவில் தலைகீழாக விழுந்து இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இருந்தபோதும் குட்டி யானையின் உடலில் இருந்து சேகரிக்கப்பட்டு உள்ள உடல் உறுப்புகள் ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு இறப்புக்கான முழு விவரம் தெரியவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: