அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மண்டல அபிஷேக விழா

பெ.நா.பாளையம், ஏப்: 16: அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவிலில் மண்டல அபிஷே விழா நேற்று நடந்தது. சின்ன தடாகத்தில் அனுவாவி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. சஞ்சீவி மலையை அனுமன் தூக்கி வந்த போது அவருக்கு தாகம் ஏற்படவே அனுவாவி மலையில் நின்று முருகப் பெருமானை வேண்டினார். இதையடுத்து முருகப் பெருமான் தனது வேலால் இம்மலையில் சுனையை ஏற்படுத்தி  அனுமனுக்கு நீர் வழங்கி தாகம் தீர்த்த தலமாக இந்த தலம் விளங்குகிறது. இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து தினந்தோறும் மண்டல பூஜைகள் நடந்தன.   நேற்று  மலைக்கோயில் மீதுள்ள யாகசாலையில் கணபதி கேள்வியுடன் மண்டலாபிஷேக விழா தொடங்கியது. இதை தொடர்ந்து கணபதி வேள்வி நடைபெற்றது. 108 சங்குகளால் முருகனின் வேல் போல அலங்கரிக்கப்பட்டு சங்கு பூஜை நடைபெற்றது.பின்னர் சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைக்கப்பட்ட கலசத்தை ஏந்தி திருக்கோயிலை சுற்றி வந்தனர். தொடர்ந்து கலசத்தில் உள்ள தீர்த்தம் மூலம் மூலவர் சுப்ரமணிய சுவாமி வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து விபூதி அலங்காரத்தில் முருகன் வள்ளி தெய்வானை சிறப்பு தோற்றத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். மகாதீபாராதனை நடைபெற்றது. முன்னதாக மண்டலாபிஷேக விழாவையொட்டி புதிதாக கொடிமரம் பிரதிஷ்டை  செய்யப் பட்டது. அதில் செப்புத்  தகடுகள் பொருத்தப்பட்டன. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Related Stories: