ஈரோடு மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கனமழை கொட்டி தீர்த்தது

ஈரோடு, ஏப்.16:  ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கோடை மழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் 104.6 மிமீ., மழை பதிவாகி இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. உச்சகட்டமாக 110 டிகிரி வரை வெயில் மக்களை வாட்டி வதைத்தது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மேல் காற்று வீசத்தொடங்கியது. சிறிது நேரத்தில் பவானி, அந்தியூர், கோபி, தாளவாடி, ஈரோடு, பெருந்துறை, சென்னிமலை, கொடுமுடி, அம்மாபேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கோடை மழை கொட்டித்தீர்த்தது. நள்ளிரவு வரை பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானது. கோடை உழவு மேற்கொள்ள இந்த மழை பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த பலத்த மழையின் காரணமாக இரவு முழுவதும் மின்சார விநியோகம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மாவட்டத்தில் பெய்த மழையளவு விபரம் (மில்லி மீட்டரில்):ஈரோடு 70 மில்லிமீட்டர், பெருந்துறை 55, கோபி 16, தாளவாடி 60, சத்தி 18, பவானிசாகர் 28.2, பவானி 89, கொடுமுடி 100.6, நம்பியூர் 85, சென்னிமலை 76, மொடக்குறிச்சி 45, கவுந்தப்பாடி 52.2, எலந்தைகுட்டைமேடு 29.4, அம்மாபேட்டை 48, கொடிவேரி 12.2, குண்டேரிப்பள்ளம் 40, வரட்டுப்பாளையம் 104.6 மில்லிமீட்டர்.  மாவட்டத்தின் சராசரி மழையளவு 54.6 மில்லிமீட்டர் என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். பவானிசாகர் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 90.03 அடியாகவும், அணைக்கான நீர் வரத்து 238 கன அடியாகவும் இருந்தது. மழையின் காரணமாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றுவது நிறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>