கொரோனா விதிமீறி மினி பஸ்கள் இயக்கம்

ஈரோடு, ஏப்.16:  கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மீறி ஈரோட்டில் மினி பஸ்களில் அதிகளவில் பயணிகளை ஏற்றியும், பள்ளி மாணவ-மாணவிகளை நிற்க அனுமதித்து இயக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிய உச்சமாக மாவட்டத்தில் நேற்று 144 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர்களை பெரும்பாலனோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றை கட்டுப்படுத்திட மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசு, தனியார் பஸ்களில் பயணிகளை சீட்டில் அமர வைத்து பயணிக்க வேண்டும். நின்றபடி பயணிக்க அனுமதிக்க கூடாது. பயணிகள், கண்டக்டர், டிரைவர் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அரசு பஸ்களிலும், தொலைதூரம் இயக்கப்படும் பஸ்களில் பாதுகாப்பு வழிமுறைகள் ஓரளவு பின்பற்றப்படுகிறது. ஆனால், ஈரோடு பன்னீர் செல்வம் பார்க் பகுதியில் இருந்து இயக்கப்பட்ட தனியார் மினி பஸ்சில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்காமல், அதிகளவில் பயணிகளை ஏற்றியும், பள்ளி மாணவ-மாணவிகளை பஸ்சில் நிற்க வைத்தபடியும் இயக்கப்பட்டது. இதேபோல், ஈரோடு மாநகரில் இயக்கப்படும் மினி பஸ்களில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்காமல் தொடர்ந்து இயக்கி வருகின்றனர். அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதால், ஈரோடு மாநகரில் கொரோனா தொற்று அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, அதிகாரிகள் விதிமுறைகளை கடைபிடிக்காமல் இயக்கப்படும் அனைத்து வித பஸ்கள், வாகனங்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் மாவட்ட நிர்வாத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்

Related Stories: