மண்ணெண்ணை வரத்து குறைவால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 லிட்டர் மட்டுமே வழங்க முடிவு

ஈரோடு, ஏப்.16: ஈரோடு மாவட்டத்திற்கு மண்ணெண்ணை வரத்து குறைவால் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு லிட்டர் மட்டுமே வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் மண்ணெண்ணெய் குடும்ப அட்டைதாரர்களுக்கு  நடப்பு மாதம் 30சதவீதம் குறைவாக 264 கிலோ லிட்டர் குறைவாக வரப்பெற்றுள்ளது. இதனால் மண்ணெண்ணெய் பெறத் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கான அளவு குறைக்கப்பட்டுள்ளது என கலெக்டர் கதிரவன் நேற்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஈரோடு மாவட்ட வழங்கல் அலுவலர் இலாகி ஜான் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் 7 லட்சத்து 32 ஆயிரத்து 922 ரேஷன் அட்டை தாரர்கள் உள்ளனர். இதில், காஸ் சிலிண்டர் பயன்படுத்தாத 96 ஆயிரத்து 744 ரேஷன் அட்டை தாரர்களுக்கும், ஒரு காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் 2 லட்சத்து 72ஆயிரத்து 207 ரேஷன் அட்டை தாரர்களுக்கும் மண்ணெண்ணை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதில், கடந்த மாதம் வரை ஈரோடு மாவட்டத்திற்கு 3 லட்சத்து 92 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணை வரத்தானது. அதன் மூலம், காஸ் சிலிண்டர் இல்லாத ரேஷன் அட்டைதாரர் ஒருவருக்கு 2 லிட்டர் மண்ணெண்ணையும், ஒரு காஸ் சிலிண்டர் வைத்துள்ள நபருக்கு ஒரு லிட்டர் மண்ணெண்ணையும் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், நடப்பு மாதம் கடந்த மாதத்தை காட்டிலும் 30 சதவீதம் குறைவாக அதாவது 2 லட்சத்து 64 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணை வரத்தாகியுள்ளது. இதனால், மண்ணெண்ணை அனைவருக்கும் கிடைக்கும் வகையில், அனைத்து மண்ணெண்ணை ரேஷன் கார்டு தாரர்களுக்கும் தலா ஒரு லிட்டர் விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்திற்கு மண்ணெண்ணை வரத்து அதிகமானால், மக்களுக்கு கூடுதலாக மண்ணெண்ணை விநியோகம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>