வீட்டில் இருந்த 13 பவுன் நகை, ₹6 ஆயிரம் ரொக்கம் கொள்ளை முகக்கவசம் அணிந்து வந்த மர்ம நபருக்கு வலை

காட்டுமன்னார்கோவில், ஏப். 16: காட்டுமன்னார்கோவில் அருகே வயதான தம்பதியரை நூதன முறையில் ஏமாற்றி 13 சவரன் நகை, ரூ.6 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டை, கமாலியா வீதியில் வசித்து வருபவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் ராமலிங்கம் (85). இவரது மனைவி ரங்கநாயகி (80). இவர்கள் தங்களுக்கு சொந்தமான மேற்கண்ட தெருவில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் எதிரே உள்ள வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை 7.30 மணியளவில் மூதாட்டி ரங்கநாயகி வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த போது முகக்கவசம் அணிந்த நிலையில் வந்த மர்ம நபர் ஒருவர், அவரிடம் தான் ஆண்டிமடத்தில் வசிக்கும் உங்கள் உறவினர் ஜெயந்தியின் அக்காள் மகன் எனவும், வெளிநாடு செல்ல இருப்பதால் ஆசீர்வாதம் பெறுவதற்காக வந்திருப்பதாகவும் தெரிவித்து அவரை உள்ளே அழைத்து சென்றுள்ளான். உள்ளே சென்று படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த ராமலிங்கத்திடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக எழுப்பியுள்ளான்.

படுக்கையில் இருந்து எழுந்த ராமலிங்கம் யாருப்பா நீ, எனக்கு அடையாளம் தெரியவில்லை, உனது மாஸ்க்கை கழற்று என கூறியுள்ளார். உடனே அவரை திசை திருப்ப ரூ.2 ஆயிரம் பணத்தை அவரிடம் கொடுத்து எனக்கு ஆசீர்வாதம் செய்து ஆயிரம் ரூபாய் என்னிடம் கொடுத்துவிட்டு, ஆயிரம் ரூபாய் நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளான். பணத்தை வாங்க மறுத்த முதியவர் ராமலிங்கம், அறையில் இருந்த பீரோவை திறந்து ஆசீர்வாதம் செய்ய பணத்தை எடுக்க முற்பட்டுள்ளார். பீரோவை திறந்த மறு நொடி அந்த நபர் மேலும் அவரை திசை திருப்பும் வகையில் முகம், கை, கால்களை கழுவிவிட்டு வந்து ஆசிர்வாதம் செய்யுங்கள் என தெரிவித்துள்ளான். மேலும் அவரது மனைவியையும் குடிக்க சுடுநீர் கொடுக்குமாறு கூறி அவரையும் பாசத்தோடு அனுப்பிவிட்டான்.கொள்ளையனின் சூட்சமத்தை அறியாத தம்பதியினர் பீரோ திறந்திருப்பதை மறந்து அடுத்தடுத்து உள்ளே சென்றுள்ளனர். இதனை பயன்படுத்திக்கொண்ட மர்ம ஆசாமி பீரோவில் இருந்த 13 சவரன் தங்க நகை மற்றும் ரூ.6 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் எடுத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளான்.

இதனை பார்த்த ஆசிரியர் ஏன் செல்கிறாய் என கேட்ட போது, கார் டிரைவர் வெளியே இருக்கிறார். அவரை அனுப்பிவிட்டு வருகிறேன் என சொல்லிவிட்டு வேகமாக அங்கிருந்து வெளியேறியுள்ளான். இதனால் சந்தேகமடைந்த ராமலிங்கம் வீட்டின் அறைக்கு சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து ராமலிங்கம் காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.உதவி ஆய்வாளர் விஸ்வநாதன், மதிவாணன், சிறப்பு பிரிவு உதவி ஆய்வாளர் லெனின் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து அங்குள்ள வீடுகளில் இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். லால்பேட்டை பகுதியில் ரமலான் நோன்பு தொடங்கியது காரணமாக காலை முதல் மக்கள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதை அறிந்து, திட்டமிட்டு நடத்தப்பட்ட இக்கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: