நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கக்கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை, ஏப்.16: திருவண்ணாமலை அடுத்த மல்லவாடி கிராமத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியம் மல்லவாடி கிராமத்தில், கடந்த ஆண்டு நேரடி ெநல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. அதனால், அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் பயனடைந்தனர். ஆனால், இந்த ஆண்டு இதுவரை அங்கு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை.நெல் அறுவடை தொடங்கியிருப்பதாலும், வெளி மார்க்கெட்டில் போதுமான விலை கிடைக்காததாலும் ஏமாற்றம் அடைந்துள்ள விவசாயிகள், நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என அதிகாரிகளிடம் முறையிட்டும் பயனில்லை.

எனவே, திருவண்ணாமலையில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகத்தில் நேற்று 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மல்லவாடி பகுதியில் உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்.அந்த பகுதியில் சுமார் 800 ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி நடந்திருப்பதால், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைப்பது அவசியம் என வலியுறுத்தினர். விரைவில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பதாக அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Related Stories: