×

அட்டைப்பெட்டி கம்பெனியில் திடீர் தீ ஜேசிபி உட்பட ₹20 லட்சம் பொருட்கள் தீயில் கருகியது தண்டராம்பட்டு அருகே பரபரப்பு

தண்டராம்பட்டு, ஏப்.16: தண்டராம்பட்டு அருகே அட்டைப்பெட்டி தயாரிக்கும் கம்பெனியில் நேற்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ₹20 லட்சம் மதிப்பிலான அட்டைப்பெட்டிகள் தீயில் கருகியது. சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்பாதுரை(72). இவர் திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த வாணாபுரம் ஊராட்சி ஆத்திப்பாடி கிராமத்தில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு பழைய அட்டைப்பெட்டிகளை மறுசுழற்சி செய்து புதிய அட்டைப்பெட்டிகளை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகிறார். இந்நிலையில், இவரது கம்பெனிக்கு வெளியே மறுசுழற்சி செய்வதற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த அட்டைப்பெட்டிகள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. அப்பகுதி மக்கள் உடனடியாக தண்டராம்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், திருவண்ணாமலை மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலர் முரளி தலைமையிலான வீரர்கள் 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் அங்கிருந்த ஜேசிபி இயந்திரம் உட்பட சுமார் ₹20 லட்சம் மதிப்பிலான அட்டைப்பெட்டிகள் தீயில் கருகியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வாணாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : JCB ,Tandarampatti ,
× RELATED ஏலகிரி மலையில் அரசு நிலம்...