×

வாங்கிய தின்பண்டங்களுக்கு பணம் கொடுக்காமல் ஊழியர்களை சரமாரியாக தாக்கி பேக்கரியை சூறையாடிய கும்பல் ஆரணி அருகே பரபரப்பு

ஆரணி, ஏப்.16: ஆரணி அருகே வாங்கிய தின்பண்டங்களுக்கு பணம் கொடுக்காமல் ஊழியர்களை சரமாரியாக தாக்கிய 6 பேர் கும்பல் பேக்கரியை சூறையாடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூர் பஸ் நிறுத்தம் அருகே பேக்கரி மற்றும் ஸ்வீட் கடை நடத்தி வருபவர் சாத்தையா(35). நேற்று முன்தினம் தமிழ் வருடபிறப்பை முன்னிட்டு, பேக்கரியில் ஏராளமானோர் தின்பண்டங்களை வாங்கி சென்றனர்.அப்போது, அங்கு வந்த சிலர் தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பேக்கரி உரிமையாளர் சாத்தையா, பணம் கொடுத்துவிட்டு செல்லுமாறு கூறியதில், அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.இதையடுத்து, அந்த நபர்கள் தனது ஆதரவாளர்களுக்கு போன் செய்து பேக்கரிக்கு வரவழைத்து சாத்தையாவை தாக்க முயன்றுள்ளனர். அப்போது, அங்கிருந்த கடை ஊழியர்களான டீ மாஸ்டர் குணசேகரன், சப்ளையர் சதீஷ் ஆகியோர் அவர்களை தடுத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த 6 பேர் கொண்ட கும்பல், அவர்கள் இருவரையும் சரமாரியாக தாக்க ஆரம்பித்தனர். அப்போது, கடையில் தின்பண்டங்களை வாங்கிக் கொண்டிருந்த பெண்கள், குழந்தைகள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
தொடர்ந்து, அந்த கும்பல் சாலையில் இருந்த கற்களை எடுத்து வந்து பேக்கரி கண்ணாடி டிராக்குகளை உடைத்து சேதப்படுத்தினர். மேலும், கடைக்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை கீழே கொட்டி சூறையாடிவிட்டு, அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதையடுத்து, அந்த கும்பல் தாக்குதலில் படுகாயம் அடைந்த பேக்கரி கடை ஊழியர்கள், சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பேக்கரி உரிமையாளர் சாத்தையா அளித்த புகாரின்பேரில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

அதில், அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்(23) மற்றும் வெங்கட், ஆகாஷ், சந்துரு, சக்திவேல், சிவா ஆகிய 6 பேரும் குடிபோதையில் பேக்கரியை சூறையாடி, அங்கிருந்த ஊழியர்களை தாக்கியது தெரியவந்தது. மேலும், அவர்கள் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பேக்கரி கடைக்கு வந்து, பொருட்களை வாங்கிக் கொண்டு பணம் தராமல் கடை உரிமையாளருக்கு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து சந்தோஷை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை ஆரணி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மற்ற 5 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags : Arani ,
× RELATED 1,040 வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா...