குடியாத்தம் அருகே தூங்கியபோது அதிகாலையில் பரபரப்பு வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் பெண் உட்பட 3 பேர் காயம்

* மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

* வனத்துறையினர் 10 மணி நேர போராட்டம்

குடியாத்தம், ஏப்.16: குடியாத்தம் அருகே தூங்கியபோது அதிகாலையில் கட்டிட மேஸ்திரியின் வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை தாக்கியதில் மனைவி, மகன், மகள் காயம் அடைந்தனர். மயக்க ஊசி செலுத்தி 10 மணிநேரம் போராடி சிறுத்தையை வனத்துறையினர் பிடித்து காப்பு காட்டில் விட்டனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் வனச்சரகம் தமிழக- ஆந்திர- கர்நாடக வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு யானை, சிறுத்தை, கரடி, மான் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து சில நேரங்களில் சிறுத்தை வெளியேறி கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, கன்று குட்டிகளை வேட்டையாடி செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் குடியாத்தம் அடுத்த களர்பாளையம் கிராமத்தில் சிறுத்தை ஒன்று திடீரென புகுந்தது. கிராமத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடுகளை வேட்டையாட முயன்றது. இதனைப்பார்த்த தெருநாய்கள் ஒன்று கூடி குரைத்தபடி சிறுத்தையை விரட்டியது. இதில் பயந்துபோன சிறுத்தை கட்டிட மேஸ்திரி வேலாயுதம்(42) என்பவர் வீட்டின் அருகே சென்றது. தற்போது கோடைக் காலம் என்பதால் வேலாயுதம் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு குடும்பத்துடன் உள்ளே தூங்கி உள்ளனர். நாய்கள் தொடர்ந்து துரத்தியதால் சிறுத்தை திடீரென வேலாயுதம் வீட்டிற்குள் புகுந்தது. இந்த சத்தம்கேட்டு தூக்கத்தில் இருந்து அனைவரும் விழித்தனர்.

வீட்டுக்குள் சிறுத்தையை பார்த்ததும் தூக்கத்தில் இருந்து அலறியடித்தபடி அனைவரும் எழுந்து ஓட முயன்றனர். இதில் வேலாயுதம் வெளியே வந்துவிட்டார். தொடர்ந்து வெளியேற முயன்ற அவரது மனைவி பிரேமாவை (40) சிறுத்தை நகத்தால் தாக்கியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்தம் சொட்ட, சொட்ட அவர் தப்பி வெளியேறினார். அதேபோல், வீட்டிற்குள் இருந்த அவரது மகன் மனோகரன்(19), மகள் தனலட்சுமி(15) ஆகியோரையும் தாக்கியது. அவர்களது உடலிலும் சிறுத்தை நகத்தால் கீறியதில் காயங்களுடன் சிறுத்தையிடம் இருந்து தப்பி வெளியே ஓடி வந்தனர். சிறுத்தை வீட்டுக்கு உள்ளேயே பதுங்கி இருந்ததால் வீட்டை வெளிப்புறமாக பூட்டிவிட்டனர். இந்த களேபரங்களால் அக்கம் பக்கத்தினர் தூக்கத்தை தொலைத்து வேலாயுதம் வீட்டுக்கு வந்தனர். சிறுத்தை தாக்கியதில் காயங்களுடன் இருந்த தனலட்சுமி மற்றும் அவரது மகன், மகள் ஆகிய 3 பேரையும் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் பேரணாம்பட்டு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கிராமத்திற்குள் சிறுத்தையை தேடினர். அப்போது, சிறுத்தை வேலாயுதம் வீட்டின் படுக்கை அறைக்குள் இருந்தது தெரியவந்தது. உடனே, சிறுத்தையை துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர். அதன்படி, காலை 10 மணியளவில் குடியாத்தம் கால்நடை மருத்துவர்களை வரவழைத்து வனத்துறையினர் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதில் சிறுத்தை மயங்கியதும் பகல் 12.30 மணியளவில் கூண்டில் அடைத்தனர். இதனால் சுமார் 10 மணிநேர போராட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து, அதற்கு முதலுதவி சிகிச்சை மற்றும் உணவு அளித்து தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள சாரங்கல் காப்பு காட்டில் விட்டனர். பிடிபட்ட ஆண் சிறுத்தை 5 வயதுடையது என வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும், தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் பார்கவதேஜா, குடியாத்தம் சப்-கலெக்டர் ஷேக் மன்சூர், தாசில்தார் வத்சலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சிறுத்தை புகுந்த தகவலறிந்த குடியாத்தம் அடுத்த பெரும்பாடி, அக்ராவரம், கணியபுரம், எர்த்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலர்பாளையம் கிராமத்திற்கு வந்தனர். இவர்களை வனத்துறையினர் விரட்டி அடித்ததால் பொதுமக்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories: