திருமுல்லைவாயலில் ஏடிஎம்மை உடைத்து கொள்ளை முயற்சி: போலீசாரை பார்த்ததும் வாலிபர் தப்பி ஓட்டம்

ஆவடி, ஏப்.16: ஆவடி அருகே திருமுல்லைவாயலில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து வாலிபர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டார். அப்போது, அந்த வழியாக வந்த போலீசாரை பார்த்ததும் வாலிபர் தப்பி ஓடி தலைமறைவானார்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், குளக்கரை தெருவில் ”யூனியன் பேங்க்” ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்நிலையில், நேற்று அதிகாலை இந்த மையத்தில் ஒரு மர்ம நபர் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். மேலும், அவர் கையில் வைத்திருந்த கடப்பாறையை கொண்டு ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்துள்ளார். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கில் வந்த ரோந்து போலீஸ்காரர் முரளிதரன் என்பவருக்கு சப்தம் கேட்டது.

 இதனையடுத்து, அவர் பைக்கை நிறுத்தி விட்டு ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். இதனை பார்த்த மர்ம நபர், முரளிதரனை தள்ளி விட்டு, தப்பி ஓடி உள்ளார். பின்னர், அந்த மர்ம நபரை முரளிதரன் அரை கி.மீட்டர் பின்னாலேயே துரத்தி சென்றுள்ளார். ஆனால், அவர் மின்னல் வேகத்தில் ஓடி  தப்பி தலைமறைவானார். இது குறித்து முரளிதரன் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது, ஏ.டி.எம் இயந்திரம் முன்பகுதி உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபருக்கு சுமார் 25வயது இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இந்த கொள்ளை முயற்சியில் ஏ.டி.எம்மில்  வைக்கப்பட்டிருந்த ₹20லட்சம் ரொக்கப் பணம் தப்பியது தெரியவந்தது. இந்த கொள்ளை முயற்சி குறித்து, வங்கி அதிகாரி ராஜேஷ் (29) என்பவர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் நேற்று காலை புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் அருணாச்சலராஜா தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், போலீசார் அந்த ஏ.டி.எம் மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள உள்ள  கண்காணிப்பு கேமரா மூலமாக வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.  

Related Stories:

>