நகை, பணம் கேட்டு சித்ரவதை மனைவி தூக்கிட்டு தற்கொலை: கணவன் கைது

திருவள்ளூர், ஏப். 16: திருநெல்வேலி மாவட்டம், இட்டமொழி அடுத்த தர்மபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகள்கள். மூத்த மகள் சிவசத்தியாவை (27), கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மகேஷ் (30) என்பவருக்கு 19.5.2015 திருமணம் செய்து கொடுத்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மகேஷ், திருவள்ளூரில் ஏசி மெக்கானிக் ஏஜென்டாக உள்ளார். திருவள்ளூரில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பில், குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், மகேஷ் மற்றும் குடும்பத்தினர், திருமணமான நாள் முதல் சிவசத்தியாவை சித்ரவதை செய்து வந்துள்ளனர். ‘’திருமணத்தின் போது போடப்பட்ட நகைகள், பணம் போதுமானதாக இல்லை, அவற்றை வாங்கி வா’ என்று அடிக்கடி துன்புறுத்தி வந்தனர். மேலும் மகேஷுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்துள்ளது. அதை தட்டி கேட்ட சிவசத்தியாவை மகேஷ் துன்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த சிவசத்தியா, நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அறிந்தது அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதனர்.

பின்னர், இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் சிவசத்தியாவின் தந்தை ராஜ்குமார் புகார் செய்தார். அதில், ‘நகை, பணம் கேட்டு எனது மகளை, அவரது கணவன் மகேஷ் மற்றும் குடும்பத்தினர் சித்ரவதை செய்துள்ளனர். அவரது தற்கொலைக்கு காரணமான மகேஷ் மற்றும் குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த், எஸ்ஐ கணேசன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிந்து மகேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 6 வருடங்கள் ஆகியுள்ளதால் வரதட்சணை கொடுமையா என திருவள்ளூர் ஆர்டிஓ ப்ரீத்தி பார்கவி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

Related Stories:

>