×

கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பூசிகள் போடும் சிறப்பு மருத்துவ முகாம்: மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

திருவள்ளூர், ஏப். 16: ஆவடி வட்டம், மோரை ஊராட்சியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை சார்பாக, கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தடுப்பூசிகள் போடும் சிறப்பு மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் (பொ) மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது : கொரோனா நோய்த் தொற்று இரண்டாவது அலை பரவல் காரணத்தையொட்டி, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசிகள் வழங்க அரசின் உத்தரவுக்கிணங்க தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

பூந்தமல்லி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு ஆகியவற்றில் உள்ள 45 வயதை கடந்தவர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் வாயிலாக பதிவு செய்யப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறுகிறது. ஆவடி அருகே உள்ள வேல்டேக் பொறியியல் கல்லூரி வளாகம், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் என அனைத்து இடங்களிலும் 700 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்றது. 350 க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் தங்களது பிரதிநிதிகள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர், தனியார் பொறியியல் கல்லூரி விடுதிகளில் அமைக்கப்படவுள்ள கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு தனிமைப்படுத்தப்படுவதற்கான கோவிட் கேர் மையத்தினை அவர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்களை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.இவ்வாய்வின்போது ஆவடி மாநகராட்சி ஆணையர் பா.நாராயணன், ஆவடி வட்டாட்சியர் செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...