×

மதுராந்தகம் அருகே பரபரப்பு ஒன்றன் பின் ஒன்றாக அரசு பஸ்கள் மோதி விபத்து: பயணிகள் 10 பேர் படுகாயம்

மதுராந்தகம், ஏப். 16: மதுராந்தகம் அருகே முன்னால் சென்ற அரசு பஸ் மீது மற்றொரு அரசு பஸ் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பயணிகள்  10 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை 8.45 மணியளவில் மதுராந்தகத்தில் இருந்து கோட்டை புஞ்சை கிராமம் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது, சூறைக்காற்றுடன் கனமழை பெய்து கொண்டிருந்தது. அச்சிறுப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே வளைவில் திரும்புவதற்காக டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கினார்.

அப்போது பின்னால், விழுப்புரம் நோக்கி வேகமாக வந்த மற்றொரு அரசு பஸ், முன்னால் சென்ற பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில், கோட்டைபுஞ்சை கிராமம் நோக்கி சென்ற பஸ் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மேலும், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை. தகவலறிந்து அச்சிறுப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த பயணிகளை மீட்டு மதுராந்தகம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பினர். பின்னர் ரெக்கவரி வாகனம் மூலம், விபத்துக்குள்ளான பஸ்சை மீட்டனர். தொடர்ந்து போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், நேற்று காலை மழை பெய்தபோது. முன்னால் சென்ற பஸ்  சரியாக தெரியாததால், விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. அரசு பஸ்கள் மோதி விபத்து ஏற்பட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Tags : Madurandam ,
× RELATED மதுராந்தகம் அருகே 3 பேருந்துகள் மற்றும் கார் அடுத்தடுத்து மோதி விபத்து