காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கொட்டிதீர்த்த கனமழை: பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம், ஏப். 16: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் நேற்று பரவலாக, இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தியது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் கோடை வெயிலை எப்படி சமாளிப்பது என பொதுமக்கள் அச்சத்துடன் இருந்தனர். இந்தவேளையில், கடந்த 2 நாட்களாக இம்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் காலையிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியத்துக்கு பின், பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் காஞ்சிபுரத்தில் பழைய ரயில் நிலையம் உள்பட பல இடங்களில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சில இடங்களில் சாரல் மழை பெய்தது. செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இம்மாவட்டத்தில் செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், செய்யூர், மதுராந்தகம், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதனால், நகர பகுதிகளில் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

அதே நேரத்தில், கிராம பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டு இருந்த தர்பூசணி, வேர்க்கடலை, உளுந்து, வாழை, கத்தரி, எள் உள்பட பல்வேறு பயிர்கள் சேதமடைந்தன. குறிப்பாக செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் ஆகிய பகுதிகளில் அதிகமாக தர்பூசணி பயிரிடப்பட்டு இருந்தது. அவைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது வழக்கம். தற்போது பெய்த மழையால், பல லட்சம் மதிப்பிலான தர்பூசணி கடும் சேதமானது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஒரு டன் தர்பூசணி ₹18 ஆயிரத்துக்கு விற்பனை ஆனது. தற்போது மழை பெய்ததால், அதன் விலை குறைந்தது. அரசு அதிகாரிகள், பயிர்களை பார்வையிட்டு, நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Related Stories: