×

அடுத்தடுத்து 3 கடைகளை உடைத்து கொள்ளை: 2 வடமாநில வாலிபர்களுக்கு வலை

செங்கல்பட்டு, ஏப்.  16: செங்கல்பட்டு பகுதியில், அடுத்தடுத்து நள்ளிரவில் 3 கடைகளின் பூட்டுகளை உடைத்து பணம், பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு ராட்டின கிணறு பகுதியில் கங்காதரன் என்பவருக்கு சொந்தமான பேக்கரி கடை உள்ளது. இதன் அருகில், சந்திரசேகர் என்பவரது கோழிக்கடை, குணசேகரன் என்பவரது மளிகை கடையும் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், அனைவரும் கடைகளை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றனர்.

நேற்று காலை வழக்கம்போல் அவர்கள், கடையை திறக்க வந்தனர். அப்போது, மேற்கண்ட 3 கடைகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, ஷட்டர்கள் திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, நள்ளிரவில் அங்கு வந்த மர்மநபர்கள், கடையில் இருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். புகாரின்படி, செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், வடமாநிலத்தை சேர்ந்த 2 பேர், கடைகளின் பூட்டுகளை உடைத்து கொள்ளையடிப்பது பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை வைத்து, 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags :
× RELATED ஆரணியில் உள்ள உணவகங்களில் உணவு...