கர்ப்பிணியை தாக்கி செயின் பறித்த மதுரை கொள்ளையன் கைது

பல்லாவரம்: ஜமீன் பல்லாவரம், ரேணுகா நகரை சேர்ந்த 8 மாத கர்ப்பிணி கீதா (24), கடந்த 9ம் தேதி தனது வீட்டு வாசலில் நின்றிருந்தபோது, பைக்கில் 2 வாலிபர்கள் அங்கு வந்தனர். அவர்களில் ஒருவன், கீதா கழுத்தில் கிடந்த 11 சவரன் தாலி செயினை பறிக்க முயன்றான். சுதாரித்துக்கொண்ட கீதா, செயினை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையன், கீதாவை சரமாரி தாக்கி, சாலையில் தரதரவென இழுத்து சென்று, செயினை பறிக்க முயன்றான்.

இதை பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனால், 2 வாலிபர்களும் பைக்கில் தப்பினர். இந்த காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, வைரலாக பரவியது. இதுகுறித்து பல்லாவரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், வியாசர்பாடியில் வசித்து வரும் பிரபல கொள்ளையன் மதுரை கார்த்திக் (26) மற்றும் அவனது கூட்டாளி இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. மதுரை ஐயனார் கோயில் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த கொள்ளையன் கார்த்திக் மற்றும் அவனது கூட்டாளிகள் தேனி மாவட்டம் பழனி செட்டிபட்டி தஞ்சை காந்தி தெருவை சேர்ந்த கிரண்குமார் (22), மதுரை மாவட்டம் நாராயணபுரம், இந்தியன் வங்கி காலனி 2வது தெருவை சேர்ந்த விஜய் (22), மதுரை மாவட்டம், அந்தியூர் பாலாஜி நகரை சேர்ந்த தினேஷ்குமார் தினேஷ் (26), சென்னை பழைய பல்லாவரம் யாதவாள் தெருவை சேர்ந்த தீனு என்ற தினேஷ்குமார் (22), ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். இதில், கார்த்திக் மீது சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 25 திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளதும், சென்னையில் கொள்ளையடித்துவிட்டு, மதுரைக்கு தப்பி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.

Related Stories: