12 ஆயிரம் படுக்கை வசதியுடன் கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் 12 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரோனா பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சென்னையிலும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் நேற்று வரை 2,72,118 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,47,630 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். 20,144 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டை விட அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பு இன்னும் 2 மடங்கு அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகிறது. பாதிப்பு அதிகமானால் அதனை சமாளிக்கும் வகையில், 14 இடங்களில் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையங்களை தயார் செய்யும் பணி சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. அதன்படி அத்திப்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 4,500 படுக்கை வசதிகளும், அண்ணா பல்கலைகழகத்தில் 1,500 படுக்கை வசதிகளும், சென்னை பல்கலைக்கழகத்தில் 900 படுக்கை வசதிகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், சென்னை ஐ.ஐ.டியில் 820 படுக்கை வசதிகளும், செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 700 படுக்கைகளுடன் கூடிய கொரோனா பாதுகாப்பு மையங்களும் ,டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக்கல்லூரி, பாரதி பெண்கள் கல்லூரி, ஜவஹர் பொறியியல் கல்லூரி, வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரி உள்ளிட்ட 14 இடங்களில் கூடுதல் 12 ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கொரோனா பாதுகாப்பு மையங்கள் அமைத்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: