தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி 25ம் தேதிக்குள் போட வேண்டும்: தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரும் 25ம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆரம்ப கட்டத்தில் சுகாதாரப் பணியாளர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வந்த நிலையில் முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே இதுவரை தடுப்பூசி போட்டுள்ளனர். இதையடுத்து 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 100 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட தமிழக அரசு புதிய செயல் திட்டத்தை அறிவித்துள்ளது.

அந்த வகையில் வரும் ஏப்ரல் 25ம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட அனைத்து மாவட்டங்களிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், துணை பொது சுகாதார இயக்குனர்கள், மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இது குறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 10 சதவீதம் பேர் தான் இதுவரை தடுப்பூசி போட்டுள்ளனர். மாவட்ட துணை பொது சுகாதார இயக்குனர்கள் வரும் 25ம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தடுப்பூசி போட தேவையான 14 நாட்கள் செயல்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநோயாளிகள் பிரிவுக்கு வரும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும். பொதுமக்கள் யாரையும் தடுப்பூசி போடுங்கள் என கட்டாயப்படுத்த முடியாது. அவர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அறிவுறுத்தவே முடியும். இந்த தடுப்பூசி திருவிழாவில் பொதுமக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசி மட்டுமே கொரோனா தொற்றை தடுக்க ஒரே வழி என்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். இவ்வாறு கூறினார்.

Related Stories: