20 லிட்டர் சாராயத்துடன் வாலிபர் கைது

சேலம், ஏப்.16: ஏற்காட்டில் 20 லிட்டர் சாராயத்துடன் வாலிபரை போலீசார் கைது செய்தனர். 600 லிட்டர் ஊறலை கீழே கொட்டி அழித்தனர். ஏற்காடு, கருமந்துறை பகுதியில் உள்ள மலைக்கிராமங்களில் சிலர் கள்ளச்சாராயம் காய்ச்சி வருவதாக, மாவட்ட எஸ்பி தீபாகனிகருக்கு புகார்கள் வந்தது. இதன்பேரில், ஏற்காடு, கருமந்துறை, வாழப்பாடி, ஆத்தூர் பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டனர். அவர்கள், தொடர் சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்காடு மலையில், மாரமங்கலம் அருகேயுள்ள கேளையூர் மலைக்கிராமத்தில் எஸ்ஐ மாதையன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் தீவிர சோதனை நடத்தினர். அதில், கோவிந்தன் மகன் சுப்பிரமணி (30) என்பவர் தனது வீட்டில், ஒரு அறையில் கள்ளச்சாராயம் காய்ச்சி வைத்திருந்தார். அங்கிருந்த 20 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். மேலும், பேரல்களில் வைக்கப்பட்ட 600 லிட்டர் ஊறலை கைப்பற்றினர். அதனை மண்ணில் கொட்டி அழித்தனர். தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி விற்ற சுப்பிரமணியை கைது செய்தனர். அந்த பகுதியில் போலீசார், தொடர் சோதனையை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>