கட்டிய 2 மாதத்தில் விரிசல் விட்ட கழிப்பிடம்

சேந்தமங்கலம், ஏப்.16: புதுச்சத்திரம் அருகே கட்டிய 2 மாதத்தில் கழிப்பிட சுவற்றில் விரிசல் விட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். புதுச்சத்திரம் ஒன்றியம் நவணி ஊராட்சி வாணக்காரன்புதூர் அருந்ததியர் தெருவில், பொதுக்கழிப்பிடம் கட்ட வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, தூய்மை பாரதம் ஊரகம் திட்டத்தின் கீழ், ₹2 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பொது கழிப்பிடம் கட்டப்பட்டது. இந்நிலையில், கழிப்பிட சுவற்றில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலை காணப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘அவசரகதியில் கழிப்பிடம் கட்டுமான பணி நடந்ததால் சுவற்றில் வெடிப்பு விழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், சுவர் விரிசல் விட்டு, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது,’ என்றனர். இதையறிந்த நாமக்கல் சின்ராஜ் எம்.பி., உத்தரவின்பேரில், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விரிசல் ஏற்பட்ட கழிப்பிட சுவற்றை ஆய்வு செய்தனர். பின்னர், ஆட்களைக் கொண்டு சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories:

>