‘டயர் ரீட்ரேடிங்’ விலை உயர்கிறது

நாமக்கல், ஏப்.16:நாமக்கல்லில், மாவட்ட டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் விமல்ராஜ் தலைமை வகித்தார். டயர் ரீட்ரேடிங் உரிமையாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராஜ்குமார் கலந்து கொண்டு, கோரிக்கைகள் குறித்தும், ரப்பர் விலையேற்றம் மற்றும் அதனால் ஏற்படும் தொழில் பாதிப்புகள் குறித்தும் விளக்கினார். கொரோனா  காலகட்டத்தில் வாகனங்கள் சரிவர இயங்காததால், கனரக வாகனங்கள் அதிகமுள்ள நாமக்கல், சங்ககிரி, சேலம், ஈரோடு மற்றும் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் இயங்கி வரும் டயர் ரீட்ரேடிங் தொழிலை இன்று வரை சரிவர நடத்த  முடியவில்லை.

பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. கடந்த 3 மாதத்தில் ரீட்ரேடிங் தொழிலுக்கு தேவையான ரப்பரின் விலை  30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மேலும், ரீட்ரேடிங் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் உபரி பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. இதனால், கனரக வாகனங்களின் ஒரு செட் டயர்  ரீட்ரேடிங் விலை ₹10 ஆயிரத்திற்கு மேல் உயர்த்தப்பட உள்ளது. இந்த விலை உயர்வை வாகன உரிமையாளர்கள் ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணைத்தலைவர் தர்மலிங்கம், இணை செயலாளர் ஜாய், பொருளாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: