கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து துவங்கியது

கிருஷ்ணகிரி, ஏப்.16: கிருஷ்ணகிரி அணைக்கு 44 நாட்களுக்கு பின் நீர்வரத்து துவங்கியது. கிருஷ்ணகிரி அணையின் நீர்மட்டம், கடந்த பிப்ரவரி 1ம் தேதி அதன் மொத்த உயரமான 52 அடியில் 50.35 அடியாக இருந்தது. இந்நிலையில், மழை பெய்யாததால் அணைக்கு கடந்த பிப்ரவரி 2ம் தேதி முதல் 21ம் தேதி வரை 20 நாட்களுக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது. அதன் பின்னர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், பிப்ரவரி 22ம் தேதி விநாடிக்கு 162 கன அடியாக நீர்வரத்து இருந்த நிலையில் அணையின் நீர்மட்டம் 47.35 அடியானது. மார்ச் 1ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை 44 நாட்களாக அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றது. இதனால் தென்பெண்ணை ஆறு நீரின்றி முற்றிலும் காய்ந்து போனது.

மாவட்டத்தில் கடுமையான வெயில் வாட்டி வருவதாலும், அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றதாலும், அணை நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டதால் விவசாயிகள் பெரும் கவலையடைந்தனர். இந்நிலையில் நேற்று விடிய, விடிய பெய்த மழையால் அணைக்கு 44 நாட்களுக்கு பின் நீர்வரத்து துவங்கியுள்ளது. அதன்படி, நேற்று காலை அணைக்கு 12 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து இடது மற்றும் வலதுபுற பாசன கல்வாயில் 12 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணையின் மொத்த உயரமான 52 அடியில், 39.30 அடி தண்ணீர் உள்ளது.

Related Stories: