பொதுக்கழிப்பிடத்தை இடம் மாற்றக் கோரி போராட்டம்

தர்மபுரி, ஏப்.16: அதியமான்கோட்டையில் பொதுக்கழிப்பிடம் அமைக்கும் இடத்தை மாற்றக்கோரி, கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அதியமான்கோட்டை ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி வள்ளுவர்நகர் ஒட்டப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே, புதிதாக பொது கழிப்பிடம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கழிப்பிடம் அமையும் இடம், வள்ளுவர் நகர் குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பிரதான தார்சாலையாகும். வள்ளுவர் நகரில் உள்ள ஓம் சக்தி, விநாயகர், அம்மன் உள்பட பல்வேறு கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களின் போது, இந்த சாலை வழியாக அம்மன் ஊர்வலம், தேர் இழுத்தல் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும். இந்த சாலையில் தான், தற்போது அரசு பொது கழிப்பிடம் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது. எனவே, பொதுக்கழிப்பிடத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக் கோரியும், பணியை உடனடியாக நிறுத்தக் கோரியும், வள்ளுவர் நகர் மற்றும் ஒட்டப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வராததால், நல்லம்பள்ளி பிடிஓ அலுவலகத்திற்கு சென்று, பிடிஒவை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அதன் பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘பொதுக்கழிப்பிடத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யக்கோரி, ஊராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை மனு கொடுத்தும், இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கலெக்டர் அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்,’ என்றனர்.

Related Stories:

>