நூற்பாலைகள் நூல் விலையை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும்

திருப்பூர், ஏப்.15: நூற்பாலைகளும், பனியன் தொழிலும் வெற்றிகரமாக இயங்க நூல் விலையை உயர்த்தாமல் தொழில் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என ஏ.இ.பி.சி. வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) தலைவர் சக்திவேல், நூற்பாலைகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்: 4 மாதங்களாக நூல்விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளதால் பின்னலாடை உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வந்த நூற்பாலைகள் தற்போது லாபகரமாக இயங்கி வருவது மகிழ்ச்சி. இருப்பினும் நூல் விலை உயர்வால் ஆயத்த ஆடை தொழிலும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து நூற்பாலைகள் சங்கங்கள் பங்கேற்க, ‘வீடியோ கான்பரன்ஸில்’ ஏப்ரல் மாதத்தில் இருந்து நூல் விலை உயர்த்தப்படாது என்று அறிவித்தீர்கள். இம்முடிவை ஏற்றுக்கொண்டு பல நூற்பாலைகள் விலையை உயர்த்தவில்லை. இருப்பினும் சில நூற்பாலைகள் நூல் விலையை உயர்த்தி வருகின்றன. இத்தகைய விலையேற்றத்தால் ஏற்றுமதியாளர்கள் தங்களது ஆர்டர்களை உரிய நேரத்தில் முடித்து அனுப்ப முடியாமல் தவிக்கின்றனர்.

மேலும் மதிப்பு சங்கிலி என்ற முறையில் ஏற்றுமதியை சார்ந்துள்ள பல்வேறு ‘ஜாப் ஒர்க்’ தொழில்களும் நலிவடையும். இத்தகைய நிலையை கருத்தில்கொண்டு, நூல் விலையை உயர்த்தும் முடிவை கைவிட வேண்டும். ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலை வளர்ச்சி பாதைக்கு திருப்பவும், நூற்பாலைகளும், பனியன் தொழிற்சாலைகளும் வெற்றிகரமாக இயங்கவும் நூல் விலையை உயர்த்தாமல் தொழில் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>