தமிழ் புத்தாண்டையொட்டி கோயில்களில் சிறப்பு வழிபாடு

திருப்பூர்,  ஏப். 15:  தமிழ் புத்தாண்டையொட்டி, திருப்பூர் கோயில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. தமிழ் புத்தாண்டு தினத்தையொட்டி திருப்பூர் விஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவபெருமாள் கோயில், கோட்டை மாரியம்மன் கோயில், ஐயப்பன் கோயில், கருப்பராயன் கோயில், கருவம்பாளையம் மாகாளியம்மன் கோயில், கொங்கணகிரி முருகன் கோயில், மலைக்கோவில் குழந்தை வேலாயுதசாமி கோயில், பிச்சம்பாளையம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதேபோல், கண்டியன்கோவில் கண்டீஸ்வரன் கோயில், கொடுவாய் விண்ணளந்த பெருமாள் கோயில், சின்னாரியப்பட்டி மாரியம்மன் கோயில், காட்டூர் சென்றாயப் பெருமாள் கோயில்களிலும் சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அனைத்து கோயில்களிலும் பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மேலும், கொரோனா கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

காங்கயம் : தமிழ் புத்தாண்டையொட்டி காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. புதுவருட பஞ்சாங்கம் படிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.  வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் பக்கதர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணிக்காக போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேபோல, காங்கயம் அடுத்துள்ள காடையூர் காடையீஸ்வரர் கோயில், மடவிளாகம் ஆருத்ர கபாலீஸ்வரர் மற்றும் ரகுபதி நாராயண பெருமாள் கோயில்கள், பாப்பினி பெரியநாயகி அம்மன் கோயில், அகிலாண்டபுரம் அகிலாண்டேஸ்வரர் கோயில், ஊதியூர் உத்தண்ட வேலாயுதசாமி உள்ளிட்ட கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் அதிகளவில் வந்திருந்து சாமி தரிசனம் செய்தனர். உடுமலை: தமிழ் புத்தாண்டையொட்டி உடுமலை மாரியம்மன் கோவிலில் நேற்று  அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள்  நடைபெற்றன.

இதேபோல பிரசன்ன விநாயகர் கோயிலில் பிள்ளையாருக்கு சந்தன காப்பு  அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.கொழுமம் கோட்டை  மாரியம்மன், தாண்டேஸ்வரர் கோயில், பெருமாள் கோயில் போன்றவற்றிலும் சிறப்பு  வழிபாடு நடைபெற்றது.இதேபோல் திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோயிலிலும்  சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடனும் முகக்கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர்.

Related Stories: