குதிரை பந்தயம் துவங்கியது

ஊட்டி, ஏப்.15: ஊட்டியில் குதிரை பந்தயம் நேற்று துவங்கியது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் மெட்ராஸ் ரேஸ் கிளப் சார்பில் குதிரை பந்தயம் நடத்தப்படுகிறது. கடந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக ஊட்டியில் குதிரை பந்தயம் ரத்து செய்யப்பட்டது. இந்த முறை குதிரை பந்தயத்திற்காக ஊட்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் தயார் செய்யப்பட்டது. இதற்காக, பெங்களூர், சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட பந்தய குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, குதிரை பயிற்சியாளர்கள் ஜாக்கிகள் கலந்து கொண்டுள்ளனர். தற்போது, கொரோனா 2வது அலை துவங்கி உள்ள நிலையில், ஊட்டி குதிரை பந்தயத்தில் பங்கேற்க வந்துள்ள ஜாக்கிகள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழ் புத்தாண்டு தினமான நேற்று ஊட்டியில் குதிரை பந்தயம் துவங்கியது. கொரோனா பரவல் தடுக்கும் வகையில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், நேற்று துவங்கிய குதிரை பந்தயத்தை எட்டின்ஸ் சாலையில் இருந்தும், நகரில் உள்ள உயரமான கட்டிடங்கள் மீது இருந்தும் பார்த்தனர்.

 

முதல் நாளான நேற்று 6 போட்டிகள் நடந்தன. இதில், முதலிடம் பிடித்த குதிரை உரிமையாளர்கள், ஜாக்கிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஊட்டியில் துவங்கி உள்ள குதிரை பந்தயத்தில் முக்கிய போட்டிகளான ‘தி நீல்கிரிஸ் 1000 கீனிஸ்’, 2000 கீனிஸ்’, டெர்பி ஸ்டேக்ஸ்’ நீலகிரி தங்க கோப்பை போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன. ஜூன் இரண்டாவது வாரம் வரை ஊட்டியில் குதிரை பந்தயம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: