நீலகிரியில் கொரோனா தொற்று விகிதம் 2.7 சதவீதம்

ஊட்டி, ஏப்.15: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று விகிதம் 2.7 சதவீதமாக உள்ளதாகவும், தினமும் 1200 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் 2வது வாரத்திற்கு பிறகு தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் தினமும் 35 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கொரோனா இரண்டாவது அலையை தடுக்கும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மார்க்கெட், வணிக வளாகங்களில் உள்ள கடைகளில் வியாபாரிகள் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். அவர்கள் முககவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத கடைகள், தனியார் நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. ஊட்டி உழவர் சந்தை, நகராட்சி மார்க்கெட் போன்றவற்றிற்கு காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் பலரும் முறையாக, முக கவசம் அணிவதில்லை.

தனிமனித இடைவெளியை பின்பற்றுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், ஊட்டி உழவர் சந்தை, நகராட்சி மார்க்கெட், மெயின் பஜார் மற்றும் மத்திய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா திடீர் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பொதுமக்கள் முக கவசத்தை முறையாக அணிய வேண்டும். கை கழுவ வசதியாக சோப் மற்றும் தண்ணீர் வைக்க வேண்டும் என்றார்.

தொடர்ந்து, கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில்,`நீலகிரி மாவட்டத்தில் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, விடுமுறை தினங்களில் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இதுவரை தடுப்பூசி செலுத்தாத 45 வயதிற்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து கொேரானா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். மாவட்டத்தில் போதுமான அளவு தடுப்பூசி இருப்பில் உள்ளது. ஊட்டி, கோத்தகிரி, குன்னூர் மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் கோவிட் கேர் சென்டர்கள் தயார் நிலையில் உள்ளது. பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் கோவிட் கேர் மையத்தில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தினமும் 1200 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரியில் கொரோனா தொற்று விகிதம் 2.7 சதவீதமாக உள்ளது. இதனால், பரிசோதனைகளை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: