கொரோனா நோயாளிகளுக்கு விரைவில் மீண்டும் சித்தா சிகிச்சை

கோவை, ஏப். 15: கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு மீண்டும் சித்தா சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் கடந்தாண்டு சித்தா சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்காக கொடிசியா கொரோனா சிகிச்சை மையத்தில் 50 படுக்கைகளுடன் கூடிய சித்தா சிகிச்சை பிரிவும் ஏற்படுத்தப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா நோய்த் தொற்றுக்கு சித்தா சிகிச்சை எடுத்துக்கொண்டனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவல் குறையத்தொடங்கியதால் கொடிசியா மையத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த சித்தா சிகிச்சைப் பிரிவு கடந்த ஜனவரி மாதத்தில் விலக்கிக்கொள்ளப்பட்டது. தற்போது கோவையில் மீண்டும் கொரோனா நோய்த் தொற்றுப் பரவல் தீவிரமாகியுள்ளது. தினசரி பாதிப்பு எண்ணிக்கையும் 600ஐ கடந்துள்ளது. வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். கொரோனா நோய்த் தொற்றுக்கு மீண்டும் சித்தா சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. விரைவில் சித்தா சிகிச்சை மையம் செயல்பாட்டிற்கு வரும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கொரோனா நோயாளிகளுக்கு சித்தா சிகிச்சையில் கபசுர குடிநீர், சூரணம், அமுக்கரா, பிரம்மானந்த பைரவம் மாத்திரைகள், ஆடாதொடை மனப்பாகு உள்பட மருந்துகள் அளிக்கப்பட்டன. சித்தா சிகிச்சையின் மூலம் நோயாளிகள் விரைந்து குணமடைந்தனர். ஆர்வத்துடன் பலரும் சித்தா சிகிச்சை மேற்கொண்டனர்.தற்போது மீண்டும் கோவையில் கொரோனா நோயாளிகளுக்கு சித்தா சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

திருச்சி சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் சிகிச்சை மையம் அமைக்கப்படவுள்ளது. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக சிகிச்சை அளிப்பதற்கு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக 80 படுக்கைகள் அமைக்கப்படவுள்ளன. விரைவில் சித்தா சிகிச்சைப் பரிவு தொடங்கப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படும்’’ என்றார்.

Related Stories: