பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை துவக்கம்

ஈரோடு, ஏப்.15:  பிளஸ் 2 செய்முறை தேர்வு நாளை முதல் துவங்க உள்ளது. இதில், ஈரோடு மாவட்டத்தில் 44,641 மாணவ-மாணவிகள் செய்முறை தேர்வில் பங்கேற்க முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள வேளையில், பிளஸ் 2 பொதுத்தேர்வு வரும் மே 3ம் தேதி துவங்கி மே 31ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வரும் ஏப். 16ம் தேதி (நாளை) முதல் ஏப்.24ம் தேதிக்குள் செய்முறை தேர்வு நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் 44,641 மாணவ-மாணவிகள் செய்முறை தேர்வினை எழுத உள்ளனர். இதில், இயற்பியல், வேதியியல் செய்முறை தேர்வினை தலா 11,752 பேரும், உயிரியல் செய்முறை தேர்வினை 7,252 பேரும், தாவரவியல், விலங்கியல் தலா 559 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் 4,688 பேரும், கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் 6,850 பேரும், புள்ளியியல் தேர்வினை 745 பேரும், மெக்கானிக்கல் சயின்ஸ் 135 பேரும், வேளாண்மை செய்முறை தேர்வினை 91 பேரும், நர்சிங் 167 பேரும், கம்ப்யூட்டர் டெக்னாலஜி தேர்வினை 226 பேரும் எழுத உள்ளனர். இவர்கள் செய்முறை தேர்வு செய்வதற்காக முன்னெற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செய்முறை தேர்வு நடத்தப்படும். ஒரே நாளில் வெவ்வேறு பாட பிரிவுகளுக்கான செய்முறை தேர்வு தனித்தனி ஆய்வகங்களில் நடக்கும். ஒரு பேட்ச் மாணவர்கள் ஒரு நாளில் ஒரே ஒரு பாட செய்முறை தேர்வில் பங்கேற்பார்கள். அதிகபட்சமாக இட வசதியை பொறுத்து 20 முதல் 25 மாணவர்களை ஒவ்வொரு பேட்ச்சாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பேட்ச் செய்முறை தேர்வு முடிந்ததும் கிருமிநாசினி தெளித்து நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வேதியியல் லேப்பில் மட்டும் கிருமிநாசினி தெளிக்கப்பட மாட்டாது. அங்கு ரசாயனம் அதிகளவில் உள்ளதால் அசாம்பாவிதம் ஏற்படும் என்பதற்காக அங்கு மட்டும் கிருமிநாசினி தெளிக்கப்பட மாட்டாது. அதேபோல், கெமிஸ்ட்ரி லெப்பில் மாணவர்கள் வாய் வைத்து உறிஞ்சும் ‘பிப்பெட்’ கருவியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பயாலஜி லேப்பில் மைக்ரோ ஸ்கோப் கருவியை பார்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories:

>