மாநில சுகாதாரத்துறையிடம் கொரோனா தடுப்பூசி மருந்துகள் கேட்கப்பட்டுள்ளது

ஈரோடு, ஏப்.15: ஈரோடு மாவட்டத்திற்கு தேவையான கொரோனா கூடுதல் தடுப்பூசி மருந்துகள் மாநில சுகாதாரத்துறையிடம் கோரப்பட்டுள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு எந்த அளவுக்கு உடலில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்பதை அறிந்து அதற்கு ஏற்ப நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிப்பது, அல்லது வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிப்பது என்பதை முடிவு செய்ய ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபம், கோபி கலை அறிவியல் கல்லூரி மற்றும் பவானி, அந்தியூர், பவானிசாகர் ஆகிய இடங்களில் ஸ்கீரினிங் சென்டர்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது 2 நாட்களில் செயல்பாட்டிற்கு வரும். இதுதவிர, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக பெருந்துறை, அந்தியூர், கோபி உள்ளிட்ட பகுதிகளில் 2000 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கொரோனா தொற்றினை கட்டுக்குள் கொண்டு வர மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திற்கு தேவையான கொரோனா தடுப்பூசி மருந்துகள் மாநில சுகாதாரத்துறையிடம் கோரப்பட்டுள்ளது. இரண்டு நாட்களில் மருந்துகள் வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாவட்டத்தின் மக்கள் தொகையில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உள்ளிட்டவை கணக்கிட்டு மாநில சுகாதாரத்துறை ஈரோடு மாவட்டத்திற்கு தேவையான மருந்துகளை ஒதுக்கீடு செய்யும்.

குறைந்தபட்சம் 10 நாட்களுக்கு இருப்பு வைக்கும் அளவுக்கு தேவையான தடுப்பு மருந்துகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று வரை கொரோனா பரவல் அதிகம் உள்ள 23 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கையை பொருத்து மாற்றம் செய்யப்படும். இவ்வாறு கலெக்டர் கதிரவன் கூறினார்.

Related Stories:

>