விவசாயிகள் கவலை மேலப்பாளையம் கோயம்பள்ளி மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வருவது எப்போது?

கரூர், ஏப். 15: நீண்ட காலமாக இழுபறியில் உள்ள கோயம்பள்ளி மேம்பால பணிகள் முடிக்கப்பட்டு எப்போது பயன்பாட்டுக்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். கரூரில் இருந்து நெரூர், சோமூர், திருமுக்கூடலூர் போன்ற காவிரி ஆற்றங்கரை பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பு மக்களும் வாங்கல் சாலையில் அரசு காலனி பிரிவு வரை சென்று, அங்கிருந்து மின்னாம்பள்ளி, பூந்தோட்டம், 16 கால் மண்டபம் வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருவதாலும், இந்த பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அனைவரும் எளிதாக விரைந்து செல்லும் வகையிலும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அமராவதி ஆற்றின் குறுக்கே மேலப்பாளையம் கோயம்பள்ளி இடையே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்காக பூமி பூஜை போடப்பட்டு பணிகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து பாலத்தின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணிகள் தவிர ஆற்றின் மையத்தில் பாலம் அமைக்கும் பணி முற்றிலும் முடிவடைந்துவிட்டது. ஆனால், அணுகு சாலை மட்டும் இருபுறமும் அமைக்கப்படவில்லை. இதற்கிடையே, அரசியல் மாற்றம் காரணமாக, உள்ளுர் பிரமுகர்களும் மாறியதால் இந்த பாலப்பணி கடந்த ஐந்தாண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. அணுகு சாலை முடிந்து பாலம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் கரூரில் இருந்து சோமூர், நெரூர், கோயம்பள்ளி, திருமுக்கூடலூர் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் சுற்றி செல்லாமல் எளிதாக, பசுபதிபாளையம், மேலப்பாளையம் வழியாக இந்த பகுதிகளை அடைந்துவிடலாம்.

அந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலம் திறக்கப்படாமல் இருப்பதால் அனைத்து தரப்பினர்களும் அவதியிலும், விரக்தியிலும் உள்ளனர். நடந்து முடிந்த தேர்தலிலும், இந்த பாலப்பணி முடித்து தரப்படும் எனவும் உறுதிமொழி வைக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய ஆட்சி அமைந்ததும் மிக முக்கியத்தும் வாய்ந்த இந்த பாலப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்து அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories: