×

சித்திரை முதல் நாளில் விதைப்பு பணியில் விவசாயிகள்

தொண்டி, ஏப்.15: சித்திரை முதல் நாளில் தொண்டி, நம்புதாளை மற்றும் சுற்றுவட்டார விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வயல்களில் விதைப்பு பணியில் ஈடுபட்டனர். சித்திரை முதல் நாளில் விவசாயிகள் இந்நாளில் தங்கள் வயல்களில் விதைப்பு பணியில் ஈடுபட்டு நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டுமென்று வேண்டி கொள்வார்கள். நேற்று தொண்டி, நம்புதாளை, முகிழ்ந்தகம் உள்ளிட்ட பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகாலையில் தங்கள் வயலுக்குச் சென்று ஆதவனுக்கு நன்றி கூறும் விதமாக ஆரத்தி எடுத்து விதைப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக அதிகாலை முதலே நல்ல மழை பெய்ததால் இந்த வருடம் நல்ல விளைச்சல் இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தனர். இதுகுறித்து விவசாயி ராமலிங்கம் கூறுகையில், ஆதவனுக்கு நன்றி சொல்லும் விதமாக வருட பிறப்பின் முதல் நாள் விதைப்பது வழக்கம். சித்திரை முதல் நாள் எப்பொழுதும் மழை பெய்வதில்லை.

ஆனால் இந்த வருடம் முதல் நாளிலேயே மழை பெய்தது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த வருடம் முழுவதும் நல்ல மழை பெய்து, விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்றார். ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அ.மனக்குடி, உப்பூர், பாரனூர், ஆவரேந்தல், வெட்டுக்குளம், குலமாணிக்கம், கொக்கூரணி, காவணக்கோட்டை, ஆய்ங்குடி,பனிக்கோட் டை, ஆனந்தூர், நத்தக்கோட்டை,கூடலூர், ஏ.ஆர்.மங்கலம், சனவேலி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் விதை நெல்லை வயலில் இட்டு முளைப்பு திறனையும் சோதித்து வருகின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், நாங்கள் ஒவ்வொறு ஆண்டும் எங்களுடைய விளை நிலங்களில்  விளைந்த நெல்லை, அடுத்த ஆண்டில் விதைப்பு செய்வதற்காக விதை நெல்லாக ஒதுக்கி சேகரித்து வைத்து விடுவோம். அந்த நெல்லை ஆடி பட்டத்தில் விதைப்பு செய்யும் விதமாக சித்திரை மாதத்திலே இந்த நெல்லினை வயலின் ஒரு இடத்தில் போட்டு, மண் இட்டு மூடி, தண்ணீர் ஊற்றி பூமாதேவி மற்றும் சூரிய பகவானை வழிபட்டு அதன் முளைப்பு திறனை கண்டறிந்த பின்பு, இந்த விதை நெல்லை எங்களுடைய விளை நிலங்களில் விதைப்பு செய்வது என்பது காலம் தொட்டு தொடர்ந்து செய்து வருகின்றோம் என்றனர்.

Tags : Chittirai ,
× RELATED சுவாமிமலை முருகன் கோயில் 60...