₹4 ஆயிரம் லஞ்சம் பெற்று கைதான மின்வாரிய உதவி பொறியாளரை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை

சேலம், ஏப். 15: சேலத்தில் மின் இணைப்புக்கு ₹4 ஆயிரம் லஞ்சம் பெற்று கைதான, மின்வாரிய உதவி பொறியாளரை சஸ்பெண்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் தாரமங்கலம் அடுத்த சின்னப்பம்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது விசைத்தறி கூடத்திற்கு, மும்முனை மின்சார இணைப்பு கேட்டு சின்னப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அப்போது மின் இணைப்பு வழங்க ₹4 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என, மின்வாரிய உதவி பொறியாளர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் அதிருப்தியடைந்த சதீஷ், இதுகுறித்து சேலம் லஞ்ச ஒழிப்பு தடுப்பு பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசாரின் அறிவுறுத்தல்படி, ரசாயனம் தடவிய ₹4 ஆயிரம் ரொக்கத்ைத சதீஷ் எடுத்துச் சென்று, உதவி பொறியாளர் குணசேகரனிடம் கொடுத்தார். இதனை வாங்காத குணசேகரன், அருகில் உள்ள கடை உரிமையாளர் வெங்கடாசலத்திடம் கொடுக்குமாறு தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சதீஷ் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று வெங்கடாசலத்திடம் லஞ்ச பணத்தை கொடுக்கும் போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் உதவி பொறியாளர் குணசேகரனையும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். லஞ்சம் பெற்றதாக உதவி பொறியாளர் கைது செய்யப்பட்டது குறித்து, மேட்டூர் வட்டார மின்வாரிய அதிகாரிகளுக்கு, லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை அனுப்பியுள்ளனர். இதன் அடிப்படையில் குணசேகரனை சஸ்பெண்ட் செய்யவும், துறை ரீதியாக மேல் விசாரணை மேற்கொள்ளவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>