இடைப்பாடி அருகே குழாய் அமைக்க பாறைக்கு வெடி வைக்க எதிர்ப்பு பொக்லைனை சிறைபிடித்து முற்றுகை

இடைப்பாடி, ஏப். 15: இடைப்பாடி அருகே பாசன குழாய் அமைக்க பாறைக்கு வெடி வைக்க எதிர்ப்பு தெரிவித்து, நேற்று கிராம மக்கள்  இயந்திரத்தை சிறைபிடித்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், இடைப்பாடி அடுத்த  தேவூர் புள்ளாகவுண்டம்பட்டி ஊராட்சி சீரங்ககவுண்டம்பாளையம் கிராமத்தில், சுமார் 150 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் 7 பேரின் நிலத்துக்கு,  காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல குழாய் அமைக்கும் பணி, அதிமுக நிர்வாகிகள் உதவியுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று போலீசார் கைது செய்தனர். போலீஸ் தாக்கியதில்  ஒரு பெண்ணுக்கு காது ஜவ்வு கிழிந்தது பெரும் பிரச்னையானது.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரத்தில், மின்வாரிய நிலத்தில் அனுமதியின்றி குழாய் அமைப்பதாக தெரிவித்த விவசாயிகள், ஊராட்சிக்கோட்டை மின்திட்ட அதிகாரியிடம் மனு கொடுத்தனர். இந்நிலையில் நேற்று காலை, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் குழாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அங்கு வந்த 20க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், பொக்லைனை முற்றுகையிட்டு, ஆற்றுப்படுகையில் பாறைகளுக்கு வெடி வைத்து தகர்க்க எதிர்ப்பு தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தேவூர் எஸ்ஐ அர்ஜூனன் தலைமையிலான போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பாறைக்கு வெடி வைக்கும் பணி நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த சங்ககிரி துணை தாசில்தார் ஜெயக்குமார், விஏஓக்கள் மலர், அருள்முருகன் ஆகியோர், பாறைக்கு வெடி வைப்பதற்காக பொதுப்பணித் துறையில் பெற்ற ஆணையை காண்பித்தனர், இதையடுத்து முற்றுகையை கைவிட்டு, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: