எந்தவித அச்சமும் தேவையில்லை தயங்காமல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்

தர்மபுரி, ஏப்.15: கொரோனா பாதிப்பை தவிர்க்க, பொதுமக்கள் அச்சமின்றி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திற்கு இதுவரை 59 ஆயிரத்து 800 கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. அவற்றில் 51 ஆயிரத்து 228 ஊசிகள் போடப்பட்டுள்ளது. அதேபோல, 5300 கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. மேலும், போதுமான தடுப்பூசிகள் இருப்பு உள்ளது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தொடக்கத்தில் மக்கள் மத்தியில் தயக்கம் இருந்தது. விழிப்புணர்வு காரணமாகவும், 2ம் அலை பரவல் வேகமெடுத்துள்ள நிலையிலும், தற்போது தடுப்பூசி போட்டுக் கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஒரு வாரத்தில் தினசரி 1500பேர் வரை ஊசி போட்டுக் கொள்கின்றனர். போதிய தடுப்பூசி மருந்துகள் இருப்பு உள்ளது. மேலும், சேலத்தில் மண்டல மருந்துக் கிடங்கில் போதுமான அளவு தடுப்பூசிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து தேவைக்கு ஏற்ப மருந்துகளை பெற்றுக் கொள்கிறோம். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும், ஒருசிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை காரணமாகக் கூறி, சிலரிடம் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் நிலவுகிறது. ஆனால், ஒரு விபத்தில் சிக்கும்போது தலைக்கவசம் அணிந்திருந்தால், என்ன மாதிரியான பயன் கிடைக்குமோ அது போன்றது இந்த தடுப்பூசி. இதை போட்டுக் கொண்ட பிறகு, உயிரிழப்பை முழுமையாக தடுக்க முடியும். எனவே, தயக்கமின்றி பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக, 45 வயதைக் கடந்தவர்கள் முன்னுரிமை அளித்து ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories: